• Apr 15 2026

நான் அழுது உடைந்து போனேன்; 1000 பேரின் உழைப்பும் கேள்விக்குறி .! விக்கியின் திடீர் பதிவு

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் நாளடைவில் இந்த படத்தின் வசூலும் குறைவடைந்து, விமர்சனங்களும் நெகட்டிவாக கிளம்பின.

இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதன் பின் பல காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனாலும் அப்போதும் ரிலீசாகவில்லை.


அதன் பின் ஒரு வழியாக இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் தற்கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் நகைச்சுவை கலந்த காதலை மையமாகக் கொண்டு, எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் என மொத்தமாக மிரட்டியிருந்தது.

பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்களிலேயே எல்லா படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தன. அதை நம்பியே விக்கியும் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுத்தார். ஆனால் இந்த படம் இதுவரை 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்:

“அன்பான தமிழ் சினிமா ரசிகர்களே!!

LIK படம் வெளியான போது மிகுந்த நேர்மறை எதிர்வினைகளுடன் தொடங்கியது. பல அழகான பாராட்டுச் செய்திகள் கிடைத்தன. அதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம். ஆனால் திடீரென நெகட்டிவ் விமர்சனங்கள் உருவாகி, நம்ப முடியாத, வருத்தமளிக்கும் விமர்சனங்கள் எழுந்தன. அது என்னை மிகவும் பாதித்தது… நான் அழுதேன், உடைந்து போனேன்.

ஏனெனில், இந்த படத்திற்கு ஆயிரக்கணக்கானோர் செய்த உழைப்பு, ஒரு புதிய முயற்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை, நாங்கள் கொண்டிருந்த உறுதி மற்றும் தன்னம்பிக்கை, இவை அனைத்தும் ஒரே நேரத்தில் மாயை போல தோன்றியது.

ஆனால் நேற்று முதல் நிலைமையே மாறிவிட்டது! மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்து, நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் எங்களை நெகிழ வைத்தது. பல நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்திற்காக இதயம் முழுவதையும் அர்ப்பணித்த அனைவரின் உழைப்பையும் நீங்கள் புரிந்து கொண்டு பாராட்டுவது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

உண்மையான தமிழ் சினிமா ரசிகர்களே, திரையரங்கிற்கு வந்து எங்களுக்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் வழங்கியதற்கு இதயங்கனிந்த நன்றி!”

Advertisement

Advertisement