இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் நேற்று (ஜூன் 19) தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘நூறு சாமி’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். “இதுவரை 15 முதல் 20 திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால், என் நடிப்புக்காக தனிப்பட்ட முறையில் யாரும் பாராட்டியதில்லை. அந்த வகையில், என் நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்ற முதல் படம் ‘நூறு சாமி’ தான்.” என்று அவர் கூறினார்.

மேலும், தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குநர் சசி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் சசி சார். அவர் எந்தக் கதையைக் கூறினாலும் நான் உடனே சம்மதிப்பேன். அந்த அளவிற்கு அவர்மீது நம்பிக்கை உள்ளது.” என்றார்.
‘நூறு சாமி’ திரைப்படம் குறித்து பேசுகையில், “நான் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் இலகுவான கதாபாத்திரம் இந்தப் படத்தில் தான் அமைந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தக் கதையில் சுவாசிகா சிறப்பாக நடித்துள்ளார்.” என்று பாராட்டினார். விஜய் ஆண்டனியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Listen News!