தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்த சதீஷ், தற்போது ‘கிஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். முன்னதாக ‘டாடா’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் கவின், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அயோத்தி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற ப்ரீத்தி அஸ்ரானி, இந்தப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் தயாரித்துள்ளார். இசையமைப்பை ஜென் மார்டின் மேற்கொண்டு இருக்கிறார். முழுக்க முழுக்க இளைய தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படம் நாளை (செப்டம்பர் 19) வெளிவரவுள்ள நிலையில், நடிகர் கவின் ஒரு உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதுவரைக்கும் நடித்த படங்களை விட இது ஒரு ஜாலியான படம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புறேன். ஒன்னுமே இல்லாதவன இவ்வளவு தூரம் வந்து விட்டது – நீங்கதான் காரணம். இனிமேலும் நீங்கதான் கூட்டிட்டு போவீங்க என நம்புறேன். நாளைக்கு திரையரங்குக்கு வந்து படத்தை பாருங்க. எப்பவும் போல கருத்து சொல்லுங்க. எப்பவும் போல கூட இருங்க,” என கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘கிஸ்’ படம், ரசிகர்களிடையே என்ன மாதிரியான வரவேற்பை பெறப்போகிறது என்பது ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!