தமிழ் திரைப்படத்துறையில் தனது 33வது ஆண்டு சாதனையை கடந்த நாட்களில் அடைந்த நடிகர் அஜித் குமார், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரை உலகினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், “சினிமா எனும் அற்புத பயணத்தில் 33 ஆண்டுகள் முடிகின்றன. இதை கொண்டாடவேண்டும் என்பதற்காக எழுதவில்லை; காரணம், எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கென அர்த்தமுள்ளவை,” எனத் தொடங்குகிறார்.
அஜித், சினிமா துறையில் எந்த பின்புலமும் அல்லது பரிந்துரை இல்லாமல் நுழைந்து, முழுக்க முழுக்க தனது முயற்சியால் வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். “வாழ்க்கை எனக்கு சோதனைகளாகவே இருந்தது – காயங்கள், தோல்விகள், அமைதி – ஆனால், தளரவில்லை. விடாமுயற்சியையே நான் அனுபவித்து வாழ்ந்தேன்,” என உணர்ச்சி மிகுந்தவாறு தெரிவித்தார்.
திரைப்படத் துறையில் வெற்றிகளும் தோல்விகளும் வந்த போதும், அவரது மீட்சி முயற்சிக்காக ரசிகர்களின் அன்பே காரணம் எனவும் கூறியுள்ள அவர், “உங்கள் அன்பு என்னை மீண்டும் மீண்டும் உயர்த்தியுள்ளது. அந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன்,” என உறுதியளிக்கிறார்.
சினிமாவுக்கு அப்பாலும் தனது பயணம் தொடருவதாகக் கூறிய அஜித், மோட்டார் ரேஸிங் துறையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். "அந்த டிராக் யார் என்பதை பொருட்படுத்தாது. Respect, Focus மற்றும் Grit என்பவை தான் அவசியம். பல விபத்துகள், ரத்தம் சிந்தும் தருணங்கள்… இருந்தாலும் தொடர்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
இந்த பயணம் விருதுகளுக்காகவோ, புகழுக்காகவோ அல்ல; ஒழுக்கம், துணிவு மற்றும் குறிக்கோளுக்காகவே என அவர் உறுதிபடக் கூறுகிறார். “நான் சினிமா மட்டுமல்ல; மோட்டார் ரேஸிங்கிலும் உங்களைப் பெருமைப்படுத்த நினைக்கிறேன்,” என்றார்.
அவர் தனது வாழ்க்கையின் முக்கிய ஆதராவாக மனைவி ஷாலினியை, பிள்ளைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்கையும், மறைந்த தந்தை பி.எஸ்.மணியும் தாயார் மோகினி மணியையும், குடும்பத்தினரையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2025-ல் பெற்ற பத்ம பூஷண் விருதுக்கு இந்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
“நான் அதிகம் பேசமாட்டேன், அதிகம் வெளியே வரமாட்டேன். ஆனால் என் முயற்சி எப்போதும் உங்கள் மகிழ்ச்சிக்காகவே,” என்று தனது அறிக்கையை முடித்துள்ளார்.
Listen News!