புரட்சித் தலைவரை இழிவுபடுத்தலாமா? தெலுங்கு நடிகருக்கு எதிராகக் குரல் கொடுத்த விஷால்.!
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. ராமச்சந்திரன். நடிகராகவும், பின்னர் அரசியல்வாதியாகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர் அவர். பல தசாப்தங்கள் கடந்தும் எம்.ஜி.ஆர் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையும் அன்பும் குறையாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் கூறியதாக வெளிவந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகிலும் அரசியலிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு பிரபலங்கள் பல காலமாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அவரது மனிதநேயம், உதவி மனப்பான்மை மற்றும் ரசிகர்களுடன் கொண்டிருந்த நெருக்கம் ஆகியவை அவரை தனித்துவமான தலைவராக உருவாக்கியது. அதனால் தான் அவர் மறைந்த பின்னரும் தமிழக மக்களின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கிறார்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல நடிகரான ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது எம்.ஜி.ஆர் குறித்து கூறியதாக வெளியாகியுள்ள கருத்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் பேசியபோது மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
அந்த உரையில் அவர், “மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் கத்திச் சண்டையில் மிகவும் திறமையானவர். அவரது திரைப்படங்கள் தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. அவரை பார்த்தால் எம்.ஜி.ஆர் கூட பயந்து நடுங்கி விடுவார்.” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவியதும் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பலர் இந்த கருத்து எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் இதுகுறித்து தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அவரது பதிவு தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில் விஷால், “காந்தாராவ் அவர்களை புகழ்ந்து பேசுவது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் ஐயா அவர்களை இழிவுபடுத்தி குறைத்து மதிப்பிடுவது எங்கள் மக்களின் உணர்வுகளுக்கு சரியானதாக இல்லை. அவர் இன்னும் என்றும் நினைவு கூறப்படுபவர்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த விஷயத்தில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் நான் ஒரு நடிகராக இருக்கிறேன். எதிர்காலத்தில் உங்கள் அளவிலான ஒரு நடிகரை பற்றி யாராவது தவறாக பேசினாலும் நானும் அதேபோலவே எதிர்ப்பு தெரிவிப்பேன்,” என்று கூறியுள்ளார்.
Listen News!