இயக்குநர் மது ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் "மிஸ்டர் எக்ஸ்" கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
20 நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச மாநாட்டை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிடுவதும், அந்த அச்சுறுத்தலை தடுக்க ஆர்யா தலைமையிலான உளவுத்துறை படையினர் போராடுவதும் இந்தப் படத்தின் மைய கதை. தீவிரவாத குழுவின் தலைவராக கௌதம் கார்த்திக் வில்லன் வேடத்தில் அசத்தியுள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், படத்தில் நடித்த அதுல்யா ரவி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த அவர், "மிஸ்டர் எக்ஸ் என் திரை வாழ்க்கையில் மிகச் சிறந்த அனுபவம். இது உண்மையிலேயே ஒரு சிறப்பான படம்.

என்னை நம்பி வாய்ப்பு தந்த இயக்குநர் மது ஆனந்துக்கும், இணை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் ஸ்டண்ட் உள்பட புதுமையான பல விஷயங்களை முயற்சித்தேன். இந்த நினைவுகளை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.
ஆர்யா, மஞ்சு வாரியர், சரத்குமார், கௌதம் கார்த்திக், அனகா, ரைசா வில்சன், காளி வேண்டாம் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அதுல்யா, ரசிகர்களிடம் படத்தை பார்த்துவிட்டு நேர்மையான விமர்சனங்களை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதுல்யாவின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!