• Apr 28 2026

வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கிடையாது! தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் பதிலடி

shali / 2 hours ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு அளிக்க முடியாது எனத் தெளிவாக தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளையே காரணமாகக் கொண்டு மே 2ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பது தங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நடிகர் சங்கத்தின் சட்ட விதிகளில் உறுப்பினர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்றும், அத்தகைய நடவடிக்கைகள் எப்போதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பே, நடிகர் சங்கத்தின் முன்முயற்சியால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தயாரிக்கப்பட்டு, இருதரப்பினரின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளின் கலந்தாலோசனைக்கு பிறகு தயாரிப்பாளர் தரப்புக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னேற்றமும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் சங்கம் முன்வைத்த பல்வேறு புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டே இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறுதியாக, திரைத்துறையின் தற்போதைய நிலையும் எதிர்கால வளர்ச்சியும் கருதி, இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், அதே மனப்பான்மையை மற்ற அமைப்புகளிடமும் எதிர்பார்ப்பதாகவும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் எதிர்காலத்தில் எப்படி தீர்க்கப்படும் என்பது திரைத்துறையினரால் கவனிக்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement