அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தற்போது 'ஜவான்' படம் உருவாகி வருகின்றது. இதில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். அத்தோடு தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோரும் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் முதலில் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஷாருக்கான் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேகின் கீழ் தன் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்றும் தனது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார்.
அதில் ஒரு ரசிகர் 'ஜவான்' படப்பிடிப்பின் போது அட்லி மற்றும் பிற நடிகர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கையில் "அட்லி, விஜய் மற்றும் நயன் உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது பரபரப்பாகவும் அதே நேரம் மிகவும் ஜாலியாகவும் இருந்தது" என்று கூறியிருந்தார். இவரின் பதிலை வைத்து 'ஜவான்' படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அவர் குறிப்பிட்டது விஜய்யை அல்லது விஜய் சேதுபதியை என்று இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர். மேலும் 'ஜவான்' படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக சமூக வலைதளங்களில் ஆரம்பம் முதலே தகவல் பரவி வந்தாலும், படக்குழு அதனை உறுதி செய்யாமல் இதுவரை காலமும் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் என்று குறிப்பிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Listen News!