• Apr 16 2024

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பில் வெளியாகியுள்ள வெப் தொடர் தான் சூழல். இத் தொடரில் இவருடன் இணைந்து கதிர், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இத் தொடரை விக்ரம் வேதா என்ற திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ளார்.ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவை மையமாக வைத்து, அதில் சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு ஆழமான கருத்தை முன்னிறுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த தொடரின் கதைக் களமாவது
கோயம்புத்தூரை ஒட்டி உள்ள ஒரு மலை கிராமமான சாம்பலூரில் ஒரு மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் போராட்டம் நடத்துகின்றனர். இதை அந்த தொழிற்சாலையின் முதலாளி ஹரிஷ் உத்தமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி, சப்-இன்ஸ்பெக்டர் கதிர் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு தடியடி நடத்திக் கலைக்கிறார். இதையடுத்து அன்று இரவே அந்த தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. அதேநேரம் தொழிற்சங்கத் தலைவர் பார்த்திபனின் இளையமகள் நிலாவும் அன்று இரவே காணாமல் போகிறார். கூடவே ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவும் ஒரு புறம் சிறப்பாக நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சிமெண்ட் தொழிற்சாலை எப்படி தீப்பற்றி எரிந்தது? காணாமல் போட பார்த்திபனின் மகள் என்னவானார்? இந்த மயான கொள்ளை திருவிழாவுக்கும் நடந்த இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே சூழல் தொடரின் மீதி கதை.

தொடரைப் பற்றிய அலசல் புஷ்கர் காயத்ரியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இத்தொடர் எபிசோடுக்கு எபிசோடு பல்வேறு திருப்புமுனைகள் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு எபிசோடும் கடக்கும் பொழுது இந்த குற்றத்தை அவர் செய்திருப்பாரோ, இல்லை இவர் செய்திருப்பாரோ, அல்லது அவர்கள் செய்திருப்பார்களோ என்று யோசிக்க வைத்து கடைசியில் யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்டை வைத்து ரசிகர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டில் பயணித்தது போன்ற ஒரு உணர்வை தந்துள்ளது

இத்தொடர். சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய குற்ற செயலை கதை கருவாக எடுத்துக் கொண்டு அதை மயான கொள்ளை திருவிழாவோடு பின்னிப்பிணைந்து, அதன் வழியே கதையாடல்களை உருவாக்கி திரைக்கதை அமைத்து, கடைசிவரை யாரும் கண்டுபிடிக்காத வகையில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டு கதையோடு ஒன்ற வைத்துள்ளனர்.

திரைக்கதையை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் அமைத்து மீண்டும் ஒரு வெற்றி படைப்பை கொடுத்துள்ளனர் புஷ்கர் காயத்ரி. அதே போல நிமிர்ந்த நடை, மிடுக்கான தோற்றம், கம்பீரமான வசன உச்சரிப்பு என 'திமிரு ' டன் திரியும் போலீஸ் அதிகாரியாக தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து அசத்தி உள்ளார் நடிகை ஸ்ரேயா ரெட்டி.

பார்த்திபன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் நிறைவாக செய்து மகளை இழந்து வாடும் தந்தையின் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், படத்தின் நாயகனாகவும் நடித்துள்ள கதிர் மிகவும் இயல்பான போலீசாக நடித்து அசத்தியுள்ளார்.

அதே போல ஸ்ரேயா ரெட்டியின் மகனாக நடித்திருக்கும் எஃப் ஜே நடிப்பில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு யதார்த்தமான நடிப்பை மிக இயல்பாக வெளிபடுத்தி கவனம் பெற்று உள்ளார். இவருக்கும் இவரது அம்மா ஸ்ரேயா ரெட்டிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி வெகுவாக கவர்ந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

சாம் சி எஸ் -ன் பின்னணி இசை ரசிகர்களை இசையால் கட்டிப் போட்டுள்ளது. அருண் வெஞ்சாரமுடுவின் கலை இயக்கமும் மிக மிக சிறப்பாக அமைந்து காட்சிகளை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் அதில் சொல்லப்பட்ட மெசேஜும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளதால் இத்தொடர் பார்க்க வேண்டிய தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement