• May 29 2023

டபிள் ஆக்ஷனில் விஜய் ஆண்டனி கலக்கினாரா..? கவிழ்த்தாரா..? 'பிச்சைக்காரன் 2' படத்தின் திரை விமர்சனம்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதன் 2ஆம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்தவகையில் விஜய் குருமூர்த்தி, சத்யா என டபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த பிச்சைக்காரன் 2 படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்கரு 

அந்தவகையில் முதலில் கதையை நோக்குவோம். அதாவது கோடீஸ்வரன் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி) சிறையில் இருந்து வெளியே வரும் பிச்சைக்காரன் சத்யா (விஜய் ஆண்டனி) இருவரும் முற்றிலுமாக ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே இல்லாத நிலையில், விஜய் குருமூர்த்தி இடத்திற்கு எப்படி பிச்சைக்காரன் சத்யா வருகிறான்.

காணாமல் போன தனது தங்கையை விஜய் குருமூர்த்தியின் செல்வாக்கை வைத்து கண்டுபிடித்தானா? இல்லையா? ஆன்டி பிகிலியை ஆரம்பிக்க என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக பிச்சைக்காரன் 2 படத்தின் மீதிக் கதை அமைந்துள்ளது.

நடிகர்களின் நடிப்பு 

இப்படத்தில் விஜய் ஆண்டனி டபுள் ஆக்‌ஷனில் நடித்திருந்தாலும் வழக்கம் போல அவருக்கே உரித்தான அந்த அளவான முக பாவனைகளும் அப்பாவியான நடிப்பையுமே இதிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். 

அந்தவகையில் தசாவதானியாக பிச்சைக்காரன் 2 படத்திற்கு கடும் உழைப்பை போட்டுள்ள விஜய் ஆண்டனி படம் முழுக்க தான் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என நினைத்த இடத்தில் கோட்டை விட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். 

அதேபோல் ஆரம்பத்தில் கவர்ச்சிக் கடலாக வரும் நாயகி காவ்யா தாப்பர் அதன் பின்னர் படத்தில் எந்த வேலையும் இல்லாமல் காணமல் போகிறார். 

மேலும் தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலி கான், யோகி பாபு என பலர் இருந்தும் யாருடைய கதாபாத்திரங்களும் பெரிதாக எழுதப்படவில்லை என்பது படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


படம் எப்படி?

பத்தின் உடைய முதல் பாதி முழுக்க கொஞ்சம் விறுவிறுப்பாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல சென்றாலும், இரண்டாம் பாதியில் வரும் அந்த நீண்ட நெடிய பிச்சைக்காரன் பிளாஷ்பேக் படம் பார்க்க வந்த ரசிகர்களை பாய் போட்டு படுத்துத் தூங்க வைத்து விடுகிறது என்று தான் சொல்லலாம்.

மேலும் முதல் பாகத்தில் அம்மா சென்டிமென்ட் இருந்தாலும், அது லேசாக இடம்பெற்று பணக்காரன் அம்மாவுக்காக பிச்சை எடுக்கிறான் என்பது போல இருக்கும். ஆனால், பிச்சைக்காரன் 2 படத்தில் தங்கை பாசத்தை வைத்து சென்டிமென்ட்டுக்காக ஓவர் டோஸ் கொடுத்து ரசிகர்களை சோர்வடைய வைத்து விட்டார் இயக்குநர் விஜய் ஆண்டனி. 

பலம்

நடிகர் விஜய் ஆண்டனி இந்த படத்தை இயக்கி நடித்து இசையமைத்திருப்பது பெரிய பிளஸ் என்றே சொல்லலாம். 

அதேபோல் மூளை மாற்று சிகிச்சை பற்றிய விஷயங்களும் சமூகத்திற்கு தேவையான ஆன்டி பிகிலி மேட்டரும் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கான ட்ரீட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலவீனம் 

அதாவது பிச்சைக்காரன் 2 திரைக்கதையில் ஏற்பட்ட பெரிய குழப்பம் தான் இந்த படத்தை பார்த்த ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் போரடிக்க வைத்து விடுகிறது.

அதுமட்டுமல்லாது சுவாரஸ்யமான ஒன் லைனை வைத்துக் கொண்டு பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாத படமாக இந்த பிச்சைக்காரனை விஜய் ஆண்டனி உருவாக்கி இருந்தால் இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைத்திருக்கும் என்று சொல்லலாம்.

பாடல்களில் கூட விஜய் ஆண்டனி பெரிதாக இந்த படத்துக்கு கவனம் செலுத்தவில்லை.

தொகுப்பு 

மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 படம் முதல் பாகத்தைப் போன்று இல்லை என்று தான் கூற வேண்டும். பொறுமை இருந்தால் இந்தப் படத்தையும் திரையரங்கிற்கு சென்று குடும்பத்துடன் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement