• Mar 29 2023

பிரபுதேவா, ஸ்ரீகாந்த், நாசர் எனப் பலர் நடித்த 'பகீரா' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

நடனத்தை தாண்டி நடிகர் பிரபுதேவா இப்போது அதிகம் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் 'பகீரா'. இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியுள்ள இப்படத்தை அத்விக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


அந்தவகையில் பகீரா படத்தின் முதல் காட்சியிலேயே வாலிபர்கள் தங்களின் முன்னாள் காதலிகள் பற்றி குறை சொல்லும் யூடியூப் வீடியோக்கள் பலவற்றை பார்க்க முடிகிறது. அதை வைத்தே படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஐடியா படம் முற்று முழுதாக பார்ப்பதற்கு முன்னரே நம் மனதில் தோன்றி விடும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே வர வேண்டிய ஒரு படமான பகீரா ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்து இருக்கிறது. பிற கிரைம் த்ரில்லர் படங்களை போன்றே இப்படமும் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்படுவதிலிருந்து தொடங்குகின்றது.


அதுமட்டுமல்லாது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில கொலைகள் நடக்கிறதை பார்க்க முடிகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பெரிய டெடி பொம்மை பரிசாகக் கிடைக்கிறது. அது அவர்கள் உடம்பில் கெமிக்கலை செலுத்தி கொலை செய்கிறது. அந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் ஆன நபர் பகீரா(பிரபுதேவா) என்பது பின்னர் தெரிய வருகிறது. 

மேலும் பகீரா என்கிற பெயரில் ஒரு ஆப் கூட இருக்கிறது. பலபேருடன் உறவில் இருக்கும் தங்களின் காதலிகளின் புகைப்படங்களை வாலிபர்கள் அந்த ஆப்பில் அப்லோடு செய்தால் பகீரா வந்து அவர்களை உடனே கவனித்துக் கொள்வார்.

இவ்வாறு பெண்களால் ஏமாற்றப்படும் ஆண்களுக்காக பழிவாங்கும் ஒரு ஏஞ்சல் போன்ற கதாபாத்திரம் தான் பகீரா. இந்நிலையில் மனோதத்துவம் படிக்கும் மாணவியான ரம்யா (அமிரா தஸ்தூர்) வரும்போது எல்லாம் மாறுகிறது. அதாவது இலங்கையில் தனியார் வில்லாவில் பகீராவுடன் தனியாக மாட்டிக் கொள்கிறார் ரம்யா. இதனையடுத்து சைக்கோ பகீராவிடம் இருந்து ரம்யா தப்பிப்பாரா இல்லை பழியாகிவிடுவாரா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.


குறை, நிறைகள்

இப்படத்தின் உடைய கதையில் வலுவில்லை. அதனால் ரசிகர்களை கவரவில்லை என்று கூறலாம். மேலும் ஒரு நல்ல சைக்காலஜிக்கல் த்ரில்லர் பார்வையாளர்களை கதையுடன் ஒன்ற வைக்க வேண்டும். அந்த நபர் ஏன் சைக்கோ ஆனார் என நினைத்து பார்வையாளர்கள் பாவப்பட வேண்டும். ஆனால் பகீராவில் அப்படி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எதுவும் நடக்கவில்லை. அவர் ஏன் தொடர்ந்து கொலைகள் செய்கிறார் என்பதை கூட ஒழுங்காக தெளிவுபடுத்தவில்லை.

அதுமட்டுமல்லாது இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக்கில் பகீரா மற்றும் அவரின் சகோதரர் முரளி (ஸ்ரீகாந்த்) வரும் காட்சிகள் கூட பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படத்தில் பிரபுதேவா, நாசர், ஸ்ரீகாந்த் ஆகிய நல்ல நடிகர்கள் இருந்தும் படம் இறுதிவரை பார்க்க முடியவில்லை. 

அத்தோடு படத்தில் பல பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஸ்கோப் இல்லை. சாக்ஷி அகர்வாலுக்கும், அமிராவுக்கும் தான் கொஞ்சக் கொஞ்ச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருவருமே தங்களின் கதாபாத்திரத்தை புரிந்து ஓரளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் பிரபுதேவாவின் நடிப்பை குறை சொல்ல முடியாது, தன்னால் முடிந்தளவுக்கு நடிப்பை கொடுத்திருக்கின்றார். பொதுவாக நோக்கில் பகீரா தற்போது வர வேண்டிய படம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸாக வேண்டியது. அப்படியே ரிலீஸாகியிருந்தாலும் இது போன்ற பெண்களுக்கு எதிரான ஐடியாக்கள் பெரிதளவில் எடுபட்டிருக்காது.

எனவே மேற்குறித்த விடயங்களை பொறுத்துப் பார்க்கும் போது 'பகீரா' படம் ரசிகர்களைப் பெரிதளவில் கவரவில்லை என்றே கூறலாம்.

Advertisement

Advertisement

Advertisement