• Mar 25 2023

தனுஷின் வாத்தி திரைப்படம் சொதப்பிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது வாத்தி. கல்வி வியாபாரமாவதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 


படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். வாத்தி எங்கெங்கு சொதப்பினார் என்பது குறித்த பார்வை.இயக்குநர் தெலுங்கிலிருந்து வந்தவர் என்பதாலும், படத்தை பைலிங்குவலாக உருவாக்கியிருப்பதாலும் யாருக்கும் பொல்லாப்பு வராத வகையில் தமிழ்நாடு - ஆந்திர எல்லையை கதையின் மைய லொகேஷனாக வைத்துக்கொண்டார். ஆனால் இயக்குநர் சறுக்கிய இடம் என்பது அங்கேதான். இந்தப் படம் தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பத்திலேயே 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ரசிகர்கள் திரையரங்குக்குள் அமர்ந்திருக்கிறார்கள். 

லொகேஷன்தான் அப்படி என்றால், அந்த இடத்தின் பிரதான கதாபாத்திரமான ஊர் தலைவர் மேலேயே தெலுங்கு வாடை அடிப்பதெல்லாம் டூ மச். இதனால் ரியாலிட்டியோடு சமூக அக்கறையுள்ள படமாக வந்திருக்க வேண்டிய வாத்தி, தமிழ்நாட்டுக்குள் வராமல் எல்லையிலேயே நின்றுகொள்கிறார்.

தனியார் பள்ளிகளின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கிங் மேக்கராக சமுத்திரகனி. தனியார் பள்ளிகளின் அட்டூழியம்தான் கதையின் மையக்கரு என்று முடிவெடுத்த பிறகு வில்லனை வைத்து இயக்குநர் பேயாட்டம் ஆடியிருக்க வேண்டும். ஆனால் தனுஷிடம் பேசுவதற்கும், வழக்கமான வில்லன்கள் பின்னணியில் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை செய்யும் சராசரி வில்லனாக வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக தனுஷிடம் சமுத்திரகனி பேசும் இடமெல்லாம் அப்படியே வேலையில்லா பட்டதாரியை நினைவுப்படுத்துவது பெரும் மைனஸ் என்றே சொல்லலாம்.

படத்தின் இன்னொரு மைனஸ் திரைக்கதை. முதல் பாதி ஏதோ ஓரளவு ரசிக்கும்படி காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. 

இந்த இடத்தில் தனுஷ் வந்துவிடுவார்; இந்த இடத்தில் நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இருக்கும் என ரசிகர்களால் எளிதாக கணிக்கும்படியே பல காட்சிகள் இரண்டாம் பாதியில் இருக்கின்றன. அதேபோல், எதற்காக இந்தப் படத்தில் பாரதிராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்றும் தெரியவில்லை. முக்கியமாக, திரையரங்கில் பாடம் சொல்லிக்கொடுக்கும் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். அதிலும், படத்துக்கு வரும் மாணவர்கள் எல்லோரும் எதற்காக கையில் பையோடு வருகிறார்கள் என்பதே தெரியவில்லை. இப்படி திரைக்கதையிலும், காட்சிப்படுத்துதலிலும் பல ஓட்டைகள்.

90கள் காலகட்ட திரைப்படங்களில் ஒரே பாடலில் முன்னேறுவதும், ஒரே வசனத்தில் வில்லன் திருந்துவதும் என ஏகப்பட்ட காட்சிகள் வந்திருக்கின்றன. அதை ரீ க்ரியேட் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. அதுவரை பள்ளிப்படிப்பு மீது துளிக்கூட ஆர்வமே இல்லாத மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் எப்படி அப்துல் கலாமின் கதையை கேட்ட பிறகு உடனே மனம் மாறுவார்கள். இதெல்லாம் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியே

முக்கியமாக அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு எதற்காக தேவைப்படுகிறது என்பது குறித்து ஒப்புக்குக்கூட எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி 1996லிருந்து 2001வரை தமிழ்நாட்டில் அரசு சார்பில் பள்ளி கல்விக்காகவும், கல்லூரி கல்விக்காகவும் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அது குறித்தும் படத்தில் எதுவும் இல்லை. பொத்தாம் பொதுவாக பல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

சமகாலத்திலேயே நுழைவுத்தேர்வுகளால் பல பிரச்னைகள் இருக்கும்போது அதுகுறித்தும் சிறிதளவுக்கூட எதிர்க்கும் வகையில் காட்சியோ, வசனமோ இல்லையே ஏன்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement