• Mar 26 2023

சிம்புவின் கேரியரையே காலி செய்ய பார்த்த 5 படங்கள்... சரியான நேரத்தில் கை கொடுத்து தூக்கிவிட்ட இயக்குநர்!

Jo / 6 days ago

Advertisement

Listen News!

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பத்து தல வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவான சிம்பு இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், சிம்புவின் கேரியரையே காலி செய்யும்படி வெளியான படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

1984ல் பச்சிளம் குழந்தையாக இருந்தபோதே உறவைக் காத்த கிளி படத்தில் நடித்தவர் சிம்பு. தொடர்ச்சியாக அவரது தந்தை டிஆர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த சிம்பு, 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவானார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான அலை படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார். சிம்பு, த்ரிஷா கூட்டணியில் வெளியான முதல் திரைப்படமான அலை, மிகப் பெரிய தோல்வியடைந்தது.

சிம்புவின் முதல் கேங்ஸ்டர் ஜானர் திரைப்படமாக உருவானது தொட்டி ஜெயா. VZ துரை இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கோபிகா நடித்திருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் பிரம்மாண்டமாக வெளியான தொட்டி ஜெயா, ரசிகர்களிடம் மொக்கை வாங்கியது. சிம்புவின் Rugged Boy லுக் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

விரல் வித்தை, பஞ்ச் டயலாக் என ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வர வேண்டும் என்ற கனவில் சிம்பு நடித்த இன்னொரு திரைப்படம் காளை. விஷாலின் திமிரு படத்தை ஹிட் கொடுத்ததை நம்பி இயக்குநர் தருண் கோபியுடன் கூட்டணி வைத்தார் சிம்பு. ஆக்‌ஷன் ஜனரில் உருவான இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக வேதிகாவும், காமெடி ரோலில் சந்தானமும் நடித்திருந்தனர். சிம்புவின் ஆக்‌ஷன், வேதிகாவின் கிளாமர், சந்தானத்தின் காமெடி என எதுவுமே கைகொடுக்கவில்லை என்பது தான் பெரிய சோகம்.

ஆவரேஜ் ஹிட்களை மட்டுமே கொடுத்த வந்த சிம்பு, ஒஸ்தி படத்தில் மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்தியில் சல்மான் கான் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது ஒஸ்தி. கில்லி, தில், தூள் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த தரணி ஒஸ்தியை இயக்கினார். சிம்புவுடன் ரிச்சா, சோனு சூட், சந்தானம், விடிவி கணேஷ், நாசர் என பெரிய நட்சத்திரக் கூட்டணி இருந்தும் ஒஸ்தி சுத்தமாக எடுபடவில்லை.

சிம்புவின் கேரியரில் மிக மோசமான படமாக வெளியானதில் போடா போடிக்கும் முக்கியமான இடம் உண்டு. நண்பன் விக்னேஷ் சிவனுக்காக நடித்துக்கொடுத்தார் சிம்பு. அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். ஓசி டிக்கெட்டில் படம் பார்த்தவர்கள் கூட பாதியிலேயே தியேட்டரை விட்டு தெறித்து ஓடினர். சிம்புவே விரும்பினாலும் மீண்டும் பார்க்க முடியாத படமாக உருவானது போடா போடி.

தொடர்ச்சியாக தோல்விப் படங்கள், கால்ஷீட் சர்ச்சைகளில் சிக்கி வந்த தனுஷுக்கு கை கொடுத்தது கெளதம் மேனன் தான். முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தூக்கிவிட்ட கெளதம், அடுத்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களில் சிம்புவை மாஸ் ஹீரோவாக்கினார். இன்னொரு பக்கம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மாநாடு படத்தை இயக்கி சிம்புவிற்கு பூஸ்ட் அப் கொடுத்தது வெங்கட் பிரபு தான். இந்த வரிசையில் பத்து தல இயக்குநர் கிருஷ்ணாவும் இணைவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement